Skip to main content

வள்ளுவரே கற்று கொடுத்தார்...!


எனக்கு கதை எழுத ஆசை..! 
ஆனால் கற்பனை எழும்ப வில்லை..!
கவிதை வடிக்க ஆசை..! 
ஆனால் கருத்து வழிய வில்லை..!
நான் எழுதி அனுப்பியிருந்த ஏழு எட்டு கதைகளை ஒரு பத்திரிகை கூட பிரசுரிக்க வில்லை...
எப்படி போடுவார்கள், புரியாத விஷயங்களை சொன்னால்..? 
யாருக்கு வேண்டும் எனது வெட்டி வேதாந்தமும், வறட்டு நடையும்...
எனது கதைகளை, என்னாலையே படிக்க முடியவில்லை... 
அவ்வளவு வள வள..! 
எனது கவிதையை திட்டி அனுப்பியிருந்தார்கள், அடிக்காத குறைதான். அபத்த களஞ்சியம்.
இதில், வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் எனது மனைவி...
“ஏங்க..!
ஏன் இப்படி இருக்கீங்க..? 
உங்களை யாரு கதை எழுதலேன்னு அடிச்சாங்க..? 
ஒண்ணு மோட்டு வளையை பாக்கிறீங்க. இல்லே தூங்கி போயிடறீங்க..?

உருப்படியாக வேறே ஏதாவது வேலையை பாருங்க”.

“வராது..! வராது..! கதை எனக்கெழுத வராது..!”

அலுத்துக்கொண்டேன் நான்...

நான் தலையில் அடித்துக்கொண்டேன் திருவிளையாடல் தருமி மாதிரி...

சீத்தலை சாத்தனார் போல் தலை வீங்கி விட்டது...

‘கடவுளே எனக்கு உதவி செய்ய மாட்டாயா..?

கவலையில் அப்படியே நாற்காலியிலேயே தூங்கியும் போய்விட்டேன்.

யாரோ என்னை தட்டி எழுப்பியது போலிருந்தது.

விழித்தால் எதிரே ஒரு நீண்ட தாடியுடன், கையில் சுவடோடு. திருவள்ளுவர்.

 “எழுந்திருப்பா..!

உனக்கு உதவி செய்யத்தான் இறைவன் என்னை அனுப்பினார்...”
“வாங்க..! வாங்க..! கடவுள் வரவில்லையா..?”
“தருமிக்குத்தான் அவர் போவார். உன்னைப் போன்ற கருமிக்கு நானே போதும்” வள்ளுவரின் கிண்டல் பேச்சு எனக்கு சிரிப்பு வரவில்லை.

எனக்கு நகசுத்தி கூட வரும், ஆனால் நகைச்சுவை மட்டும் சுட்டுப் போட்டாலும் வராது.

“பரவாயில்லே..! உங்களை பார்த்ததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி..!” என்றேன்.
“பேசும்போது நன்றாகத்தான் பேசறே..!

எழுதும் போது மட்டும் கோட்டை விட்டுடறே..!”

நகைத்தார் ‘நட்பு’ எழுதிய நாயகன்.
உங்களைப்பார்த்தால் கொஞ்சம் சோர்வாகத்தேரிகிறதே..! கொஞ்சம் மோர் குடியுங்கள்” நான் உபசரித்தேன்.

“அதை ஏன் கேட்கிறாய் அப்பா..!

குண்டும் குழியுமாக அண்ணா நகர் வரதுக்குள்ளே சே..!

என்னா நகர் என்று ஆகி விட்டது.” என்று அங்கலாய்த்தார்.

 “எங்க சங்க கால மண் சாலையே தேவலை போலிருக்கு. நகரம் இல்லே இது..! நரகம்..! ”

ஆமோதித்தான் நான். “

ஆம் வள்ளுவரே..!

நாங்க கொஞ்சம் கொஞ்சமாக கற்காலத்தை நோக்கி போய்க் கொண்டிருக்கிறோம்.

இப்போதெல்லாம் வீட்டில் மெழுகு வர்த்தி, கை விசிறிதான்- கரண்ட் என்பது காணாமலே போச்சு”
“சரி..! சரி..! அரசியலை விடு..!

விஷயத்துக்கு வருவோம்” என்று பேச்சை மாற்றினார் வள்ளுவன். ராஜதந்திரி அல்லவா..!

“உன்னோட பிரச்னை என்ன..?

கதை எழுத வரலே..! கவிதை சுத்தமா வரேலே..!
அவ்வளவு தானே..!
நான் சொல்றபடி செய். நன்கு வரும்.” என்றார் வள்ளுவர்
“என்ன பண்ணனும்..?”- என்றேன்.
*முதல்லே நிறைய படிக்கணும்..!

ஐந்து வரி எழுத ஐயாயிரம் வரி படிக்கணும்..!

அப்புறம் தான் எழுதவே ஆரம்பிக்கணும்”

“அய்யோடா..! கல்லூரியிலேயே கஷ்டப்பட்டு படிச்சு ஒரு மாதிரி ஒப்பேத்தினேன். படிக்க கஷ்டப்பட்டு உத்தியோக உயர்வு வேண்டாமென்று சொல்லிவிட்டேன். என்னைப் போய்..!” என்று இழுத்தேன் நான்.

வெகுண்டார் வள்ளுவன். “படிக்காமல் கதை பண்ணினால், கவிதை சொல்ல நினைத்தால் காய்ந்து தான் போவீர்கள்.- சாடினார் ‘சான்றாண்மை’ சொன்ன பிரான்.
“சரி..!

நிறைய படிக்கிறேன்..!
அப்புறம் எழுதறேன். மேலே சொல்லுங்கள்”
*இரண்டாவது:

எழுதப் போற பிரச்சினை என்ன என்பதை முத்லில் தெரிந்து கொள்.

அந்த பிரச்னையை நன்றாக அலசு.

மற்றவர் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று பார்.

எதை,எப்படி,எப்போது சொல்லவேண்டுமோ அப்படியே சொல்லும் திறனை வளர்த்துக்கொள்.” அழகாக ஆரம்பித்தார் வள்ளுவன்.
கொஞ்சம் புரிந்தது போலிருந்தது எனக்கு.எனது தவறு தெரிந்தது.
*மூன்றாவது:

சொல்லும் விஷயத்தை அழகாக, கூடிய வரையில் அந்த மொழியிலேயே சொல்.

சுருக்கமாக சொல். அவ்வையிடமிருந்து கற்றுக்கொள். இரண்டு வரியை இருபதாக்க இது என்ன மெகா சீரியலா..?”
நான் சிரித்தேன். என்னை சொல்லிவிட்டு இவரே தங்கலிஷ்லே பேசறாரே.
வள்ளுவர் சொன்னார் சிரிக்காதே அப்பனே..!

சில விஷயங்களை தமிழ்ப்படுத்தினால், படிப்பவர் பாடு பெரும் பாடு.
“இல்லை..! இல்லை..! மேலே சொல்லுங்கள்”
வள்ளுவர் தொடர்ந்தார்.
“நான்காவது:

நான் எழுதிய “பயனில சொல்லாமை” 20வது அதிகாரத்தில் வரும் குறட்களை கடைப்பிடி.

“சொல்லுக சொல்லின் பயனுடைய : சொல்லற்க சொல்லின் பயனிலா சொல்” இந்த குறள் புரிந்ததா..?”

“அப்புறம் எனது 65வது அதிகாரம் “சொல்வண்மை” படித்து நிற்க அதற்கு தக. கட்டாயம் எல்லாக் குறளும் படி.
எப்போதெல்லாம் நேரம் கிடைக்குமோ, அப்போதெல்லாம், நல்ல சிறந்த கதைகளை, கவிதைகளைப் படி. குப்பைகளை வெட்டி எறி. அதுவே நீ உருப்பட வழி”
“அப்படியே ஆகட்டும் ஐயா..!”- வேறு என்ன சொல்ல.
“சொல்ல மறந்துவிட்டேன். இயற்கையை ரசிக்க கற்றுக்கொள். உனது அனுபவம் உனக்கு கை கொடுக்கும். உளறிக் கொட்டுவதை தவிர். மக்களை அவர்களது கலாச்சாரத்தை புரிந்து கதை சொல்”
‘!’ – வாயைப் பிளந்தேன் நான். இவ்வளவு இருக்கா..?
“வாயை மூடு. இங்கு கொசு அதிகம் . உள்ளே போய்விடும். நான் வருகிறேன்!” எழுந்தார் குறள் கொடுத்த கோமகன்.
****
நச்சென்று தலையில் ஒரு அடி. விழித்தால் மனைவி. கையில் தோசைக் கரண்டியுடன்.
“கடைத்தெருவுக்கு போய் காய் வாங்கிட்டு வாங்கன்னு கரடியாய் கத்தறேன்..!

கனவு கண்டுகிட்டா இருக்கீங்க!. முதல்லே கெளம்புங்க..!”
நான் எழுந்து விட்டேன்...

உண்மையில் நான் எழுந்துவிட்டேன்...

முதலில் மற்றவர் எழுதியதை, நல்ல விஷயங்களை படிக்க முடிவு செய்து விட்டேன். முக்கியமாக வள்ளுவன் தந்த குறளை. இனி கதை எழுதி கண்டவர் வாயில் விழுவதில்லை. 

எனது முடிவு நல்ல முடிவு என்றே தோன்றுகிறது.

*****குறைந்த பட்சம் வாசகர்களுக்கு ஒரு துன்பம் குறைந்தது...!

Comments

Popular posts from this blog

குமார பர்வதம் இனிமையான ஒரு பயண அனுபவம்

குமாரபர்வதம் என்பது மேற்குதொடர்ச்சி மலையில் குடகுமலையில் இரண்டாவது உயர்ந்த சிகரம். கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து மேலும் ஒரு 100 கிலோ மீட்டர் பயணம் செய்து இந்த குமார பர்வத மலையின் அடிவாரம் குக்கே சுப்பிரமணியா என்ற இடத்தை அடைந்தால் அங்கே தமிழ்நாட்டில் இருக்கும் பழனி கோவில் போன்று முருகனுக்கு ஒரு கோவில் இருக்கிறது. அதன் அடிவாரத்தில் இருந்து சுமார் 14 கிலோமீட்டர் பயணம் செய்து குமாரபர்வதா மலையை அடைய வேண்டும். வினோத், நான் மற்றும் பாலா .. .. நான் டிசம்பர்-6 2019 அன்று மதியம் சென்னை சென்ரல் ரயில் நிலையத்தில் இருந்தது மங்களூர் செல்லும் West coast express train-ல் இருந்து எனது பயணத்தை தொடர்ந்தேன்... மேலும் வினோத் தஞ்சாவூரில் இருந்து கோவைக்கு இரவு 8:00 மணிக்கு வந்து நான் பயணித்த West coast express train-ஜ சரியான நேரத்தில் பிடித்தான்... வினோத் அவனுக்கும் எனக்கும் சேர்த்து இரவு உணவாக இட்டிலி கொண்டு வந்திருந்தான்... இரவு ரயில் பயணத்தின்போது நாங்கள் எங்களுடைய பயணத்தையும் மற்றும் பயண கட்டமைப்பு பற்றியும் விவாதித்து வந்தோம்... அதே நேரத்தில் பெங்களூர்  இருந...

திருவண்ணாமலை - புண்ணியம் தேடி ஒரு பயணம்

எனது வாழ்க்கையில் கடினமான மற்றும் இக்கட்டான சூழ்நிலையில் எனது உடல், மனம் மற்றும் ஆவியை ஒருமுகப்படுத்தி நவ்வாழ்கை வழங்கியவர் என்று எனது இதயத்தில் வாழும் எனது தாய் மற்றும் தந்தை போல் என்னுடன் இருக்கும் இந்த திருவண்ணாமலை உண்ணாமுலையாள் (பார்வதி) மற்றும் அண்ணாமலையார் (சிவன்) நான் பலமுறை திருவண்ணாமலை சென்று இருக்கிறேன். எனது திருமணத்திருக்கு முன்பும், திருமணமாகி எனது மனைவி ஆறு மாத காலம் தாய்மையாக இருந்த போது நாங்கள் திருவண்ணாமலை சென்று தரிசித்து விட்டு நாங்கள் குழந்தை பிறந்த பிறகு கண்டிப்பாக வந்து தரிசிக்கிறோம் என்று வேண்டிக்கொண்டோம். அதுபோல எங்கள் மகன் சர்வேஸ்வரன் பிறந்த பிறகு நாங்கள் திருவண்ணாமலை கோவில் சென்று நாங்கள் ஆசிர்வாதம் பெற்று வந்தோம். "நம்பினால் கைவிடமாட்டார் இந்த திருவண்ணாமலையார்". திருவண்ண்னாமலைக்கு பழங்காலம் முதலே ஒரு தொன்ம முக்கியத்துவம் உள்ளது. சங்க காலம் தொட்டு குறிப்பிடப்பட்டுவரும் சில கோயில்களில் அது ஒன்று. நிலவியலில் அடுத்த தடயம் உள்ளது. திருவண்னாமலை  ஒரு எரிமலை. திருவண்ணாமலையில் உள்ள அந்த எரிமலை பல லட்சம் வருடம் பழையது.  அந்த எரிமலை வெடித்து சிதறிய போது தீக்கு...

வெள்ளியங்கிரி மலை பயணம்...

வெள்ளியங்கிரி மலை பயண அனுபவம்தான் எங்கள் வாழ்க்கையில் அடுத்தடுத்த பயணங்கள் செய்ய வழிவகுத்தது... நம் வாழ்க்கையில் ஒரு முறையாவது இந்த வெள்ளியங்கிரி மலை பயணம் செய்ய வேண்டும்... இந்த பூமிப் பிரபஞ்சத்தில் மிகச் சிறந்ததும், புண்ணிய பூமியுமான நம் பாரத தேசம், மிகப் பழமையானதும், சக்திவாய்ந்ததும் ஆகும். எண்ணற்ற மகான்கள் மற்றும் சித்தர்கள் மலைவாழிடங்களில் தங்களின் சக்தியாலும், தவத்தாலும் கணக்கற்ற மலைகளில் கோவில்களும், ஆன்மீக மடங்களும், பீடங்களும் நிறுவி இருக்கின்றார்கள். அங்கு நாம் செல்வதின் மூலம், நாம் நமது மனம், உடல் மற்றும் ஆன்மாவை வலுப்படுத்திக் கொள்ள முடியும். சில இடங்களில் இறைவனே சுயம்புவாக வந்து குடியேறியும் உள்ளார். அப்படி எல்லாம் வல்ல ஈசனாகிய சிவபெருமான் வந்து குடியேறிய இடம் தான் நாம் பார்க்கும் தென் கைலாயம் எனப்படும் வெள்ளியங்கிரி மலை திருத்தலம். கோவை அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள வெள்ளியங்கிரி மலை ஒரு வழிபாட்டுத்தலம். ஏழு மலை கடந்து உச்சிக்கு சென்றால் நாம் தரிசிப்பது ஒரு சுயம்பு சிவலிங்கம். ஈஷா யோகா மையம் மற்றும் தியானலிங்கம் இருப்பதும் வெள்ளியங்கிரி...