Skip to main content

அன்புள்ள அப்பாவுக்கு...


இரண்டு கடிதங்கள் வந்திருந்தன. ஒன்று அவர் எதிர் பார்த்துக் கொண்டிருந்த டி.என்.ஏ ரிப்போட், மற்றது அழகாக குண்டு குண்டாக அவருக்கு நன்கு பழக்கப்பட்ட கையெழுத்தில் முகவரி எழுதப்பட்டிருந்தது. ஊட்டி கான்வென்ட் ஹாஸ்டலிலிருந்டது எழுதப்பட்டிருந்த அக்கடிதத்தைத்தான் முதலில் பிரித்துப் படித்தார்.
‘அன்புள்ள அப்பா’
பதினைந்து வயது நிரம்பிய மகன் ராஜுவிடம் இருந்து கடிதம் வந்திருந்தது. ஆர்வத்துடன் தொடர்ந்து வாசித்தார்.
‘அப்பா இனிமேல் உங்களை உரிமையோடு ‘அப்பா’ என்று என்னால் அழைக்க முடியுமோ தெரியாது. ஆனாலும் நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் டி.என்.ஏ ரிப்போர்ட் உங்கள் கையிற்கு வருமுன் எனக்கும் உங்களுக்கும் இடையே இருந்த உறவைப் பற்றி மனம் விட்டுப் பேசவிரும்புகின்றேன்.
அப்பா என்றால் பாசம், அப்பா என்றால் அன்பு, எனக்கு எல்லாமுமாய் நீங்கள் தான் இருந்திருக்கிறீர்கள். அம்மாவின் அலட்சியமும், அசட்டையும், உதாசீனமும் என்னை அம்மாவிடம் இருந்து தூரவிலகிப்போக வைத்ததாலோ என்னவோ, உங்கள் மீது அதிகம் ஈடுபாடு கொள்ள வைத்தது. அன்பையும் பாசத்தையும் என் இதயத்தில் விதைத்து விட்டு உங்கள் இதயத்தை மட்டும் எப்படி அப்பா உங்களால் கல்லாக்கிக் கொள்ள முடிந்தது?
அம்மாவிற்கும் உங்களுக்கும் இடையே ஏற்பட்ட மனஸ்தாபம் பூதாகரமாய் வளர்ந்து இப்படி விவாகரத்தில் முடியுமென்று நான் கனவிலும் நினைத்து பார்க்கவில்லை. ‘இவனுக்கு அப்பா நீங்கள் அல்ல’ என்று அம்மா ஆவேசமாகக் கத்திக் கூச்சல் போட்ட போது கூட நான் அதைப் பெரிது படுத்தவில்லை. ஆனால் ‘நீ என் மகன்தானே?’ என்ற கேள்விக் குறியோடு என்னை நீங்கள் நிமிர்ந்து பார்த்தீர்களே அதைத்தான் என்னால் தாங்க முடியவில்லை.
பெற்றோருக்குள் ஏற்படும் பிரச்சனைகளால் பிஞ்சுமனங்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகின்றன என்பதை ஏன்தான் பெற்றவர்கள் உணர்ந்து கொள்ள மறுக்கிறார்களோ தெரியாது. என் எதிர் காலத்தை நினைக்க எனக்கே பயமாக இருக்கிறது. எல்லோர் பார்வையிலும் நான் ஒரு கேள்விக் குறியாய்த் தெரிகிறேன். என்னைப் பொருத்தவரை எனக்கேற்பட்ட இந்தப் பாதிப்பு ஒரு மாறாத ரணமாய் என் மனதில் பதிந்து விட்டது.
அப்பா கடைசியாக உங்களிடம் ஒரு வேண்டுகோள்! விஞ்ஞானம் முன்னேறி விட்டது. அம்மா சொன்னது உண்மை என்றால் டி.என்.ஏ ரிப்போட் வந்ததும் நான் உங்கள் மகன் அல்ல என்பது நிரூபணமாகிவிடும். அந்த நிமிடமே நான் உங்களை விட்டு அன்னியப்பட்டு விடுவேன். அப்படி ஒரு நிலைமை ஏற்படுமுன் கடைசியாக ஒரு முறை உங்களைச் சந்திக்க விரும்புகின்றேன். எனக்கென்னவோ உங்கள் தோளில் முகம் புதைத்து மனதில் இருப்பதை எல்லாம் உங்களிடம் அழுது கொட்டித் தீர்க்க வேண்டும் போல இருக்கிறது! உங்கள் பிடிவாதத்தை கைவிட்டு என்னைப் பார்க்க ஒரே ஒரு முறையாவது வருவீர்களா?’
அந்தக் கடிதத்தை வாசித்ததும் அவர் இடிந்து போய்விட்டார். கணவன் – மனைவி பூசல் காரணமாக ஒன்றுமறியாக் குழந்தை வீணாகத் தண்டிக்கப் படுகிறானே என்று நினைத்தார். விவாகரத்துக் கோரும் அளவிற்கு அவர் என்ன தான் தப்புச்செய்தார்?
கல்யாணமான புதிதில் அவருக்கு ஏற்றமாதிரி நடந்து கொண்ட மனைவி காலப் போக்கில் தன் சுயரூபத்தைக் காட்டத் தொடங்கினாள். சிறிது சிறிதாக அவர்களுக்குள் தொடங்கிய பிரச்சனை குழந்தை பிறந்த பின்பும் தொடர்ந்து விசுவரூபம் எடுத்தது.
அவரிடம் பணம் இருந்தது, அவளிடம் அழகும் இளமையும் இருந்தன. அவளது விருப்பம் இல்லாமல் அவளது குடும்பத்தின் நிர்ப்பந்தம் காரணமாகத்தான் இந்தக் கல்யாணம் நடந்தது என்பது அவளாகச் சொல்லும் வரை அவருக்குத் தெரியாது. ஆனாலும் தனது குடும்ப சூழ்நிலையை மனதில் கொண்டு அவரிடம் உள்ள வசதிகளை அனுபவிப்பதற்காக அவளும் இவ்வளவு காலமும் மௌனமாய் அவரோடு ஒத்துப் போயிருக்கிறாள்.
‘உனக்கு விருப்பம் இல்லாமலா இந்தக் கல்யாணம் நடந்தது?’
‘ஆமா! என்னை ஒரு பெண்ணாய் யாருமே மதிக்கலே! உங்களுடைய பணத்தைக் குறிவைத்து என் ஆசைகளை, என் காதலை, கடந்த காலத்தை எல்லாவற்றையுமே எங்க அப்பா அடமானம் வைத்து விட்டாரே!’ அவள் விசும்பி விம்மலாய் வெடித்தாள்.
‘காதலா…….?’
‘ஆமாம் காதல்தான்! என் காதலனைத் திருமணம் செய்யப்போவதாக நினைத்துத் தான் அவனோடு நான் நெருங்கிப் பழகினேன். ஆனால் விதி தான் உங்கள் உருவத்தில் வந்து விளையாடி விட்டதே! இனிமேலாவது எனக்கு விவாகரத்து மூலமா விடுதலை கொடுங்க…’
‘அப்போ இத்தனை காலமும் என்னோட வாழ்ந்ததெல்லாம்……?’
‘வாழ்ந்தது இந்த வினி உடம்பு மட்டும் தான், மனசல்ல! இனியும் போலியாய் என்னை நானே ஏமாற்றிக் கொண்டு உங்களோடு வாழ என்னாலே முடியாது. எனக்கு இந்த நரகத்தில் இருந்து விடுதலை வேணும்!’
‘பிரிஞ்சு போகத்தான் வேண்டும் என்றால் அதை யாராலும் தடுக்க முடியாது, ஆனால் நம்ம மகனோட கதி?”
‘நம்ம மகனா? யார் சொன்னது அவன் உங்க பையன் என்று?’
‘நீ… என்ன சொல்கிறாய்?’
‘ஆமாம்! ராஜ்க்கு அப்பா நீங்க இல்லை!’
”இந்தா பார்! நம்ம குடும்ப வாழ்கையோட விளையாடாதே!’
‘நான் விளையாடலே, ஆனால் அதுதான் உண்மை!’
இடி ஒன்று தாக்கியது போல அவர் அதிர்ந்து போனார்.
‘அப்போ ராஜ் என்னோட மகன் இல்லையா?’
‘இல்லை.
‘பொய்..! என்னை அவமானப்படுத்த பொய் சொல்றே.. பிரியணும்னா போய்த் தொலை.. எதுக்காக இப்படி சித்திரவதை பண்றே..’
‘இப்போ ராஜ் உங்க மகன் இல்லைன்னு நிரூபிக்கணும் இல்லியா..?’
‘கடவுளே!…
‘நிரூபிச்சுக் காட்டறேன்
மனித மனத்தில் விழும் ஏமாற்றப் பள்ளங்கள் குரூரமாக வக்கிரங்களால் நிரம்பிவிடும் போலும்… அவள் அவனை அவமானப்படுத்தவே சதி தீட்டினாள். லீவுக்கு வந்த ராஜூவை கட்டாயப்படுத்தி பரிசோதனைக்கு உட்படுத்தி…
ஹாஸ்டல் விருந்தினர் அறைவாசலில் எதிர்பாராமல் அவரைக் கண்டதும் ஒரு கணம் திகைத்துப் போய் நின்று விட்டான் ராஜ். அப்புறம் சமாளித்துக் கொண்டு, ‘நான் உங்களுக்கு ஒரு கடிதம் போட்டேனே கிடைத்ததா?’ என்றான்.
‘கிடைச்சதுப்பா…’
‘டி.என்.ஏ ரிப்போட் இன்னும் வரல்லையா?’
‘வந்திடிச்சு!’
‘வந்திடிச்சா?’
ராஜ் முகத்தில் ஏமாற்றமும், அதே நேரத்தில் அதன் முடிவை அறிந்து கொள்ளும் தவிப்பும் தெரிந்தன.
‘நினைச்சேன், நீங்க தயங்கி நிற்கும்போதே உங்களுக்கு உண்மை தெரிஞ்சிருக்கும் என்று நினைச்சேன்!’
‘தெரியும்!’
‘அப்போ அம்மா சொன்னது அத்தனையும் உண்மை தானே?’
‘இல்லை, அம்மா சொன்னதில் உண்மையில்லை! அம்மாவிற்கு என்னோடு வாழப்பிடிக்கலை, அதனாலே எனக்குக் கோபமூட்டி என்னிடம் இருந்து விவாகரத்து வாங்கத்தான் அம்மா அப்படிச் சொல்லியிருக்கா!’
‘அப்பா! நீங்க என்ன சொல்லுறீங்க?’
‘டி.என்.ஏ ரிப்போட்டைப் பார்த்தேன்! நீ என்னோட மகன்தான்!’
‘உண்மையாவா…?’
‘ஆமாம்! யார் என்ன சொன்னாலும் நீ என்னோட மகன்தான்!’
‘அப்……பா!’ அந்த ஒரு சொல்லுக்காகவே காத்திருந்தது போல அவன் பாய்ந்து வந்து அவரைக் கட்டி அணைத்து மார்பிலே முகம் புதைத்து விக்கி விக்கி அழுதான். இன்னும் பெரிதாக நெஞ்சு வெடிக்க ஓலமிட்டு அழவேண்டும் போல அவனுக்கு இருந்தது.
‘அழாதே ராஜ்!’ அவர் பாசத்தோடு கண்ணீரைத் துடைத்து விட்டார். சட்டென்று அழுவதை நிறுத்தி, ராஜ் அவரை நிமிர்ந்து பார்த்தான்.
‘இனிமேல் நான் அழமாட்டேன், எனக்கும் அப்பா இருக்கிறார்!’ ராஜ் சந்தோஷமிகுதியால் அவர் கைகளுக்குள் முகத்தைப் புதைத்து வாய்விட்டுச் சிரித்தான்.
மகனை திருப்திப் படுத்திய சந்தோஷத்தோடு அவர் வீடு திரும்பினார். வீடு வந்ததும் முதல் வேலையாக பிரித்துப் படிக்கப்படாத அந்த டி.என்.ஏ ரிப்போட்டை அப்படியே கவரோடு சேர்த்துக் கிழித்துக் குப்பைத் தொட்டியில் போட்டார். மனம் அமைதியாக இருந்தது. இந்த அமைதிக்காக அவர் கொடுத்த விலைகூட அதிகமாகத் தோன்றவில்லை. வினி கோரிய விவாகரத்தில் பரஸ்பர சம்மதம் என்று மறுபேச்சின்றி கையெழுத்து போட்டுக் கொடுத்திருந்தார்.
பதிலுக்கு அவளும் டி.என்.ஏ அறிக்கை முடிவை ராஜூவிடம் வெளியிடுவதில்லை என்று வாக்குறுதி அளித்திருந்தாள். விவாகரத்து வழக்கு முடிய சிறிது காலம் ஆகலாம்… ஆனால் ராஜூவின் நிம்மதி ஆயுட்காலத்திற்கும் நீடிக்கும்.

Comments

Popular posts from this blog

குமார பர்வதம் இனிமையான ஒரு பயண அனுபவம்

குமாரபர்வதம் என்பது மேற்குதொடர்ச்சி மலையில் குடகுமலையில் இரண்டாவது உயர்ந்த சிகரம். கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து மேலும் ஒரு 100 கிலோ மீட்டர் பயணம் செய்து இந்த குமார பர்வத மலையின் அடிவாரம் குக்கே சுப்பிரமணியா என்ற இடத்தை அடைந்தால் அங்கே தமிழ்நாட்டில் இருக்கும் பழனி கோவில் போன்று முருகனுக்கு ஒரு கோவில் இருக்கிறது. அதன் அடிவாரத்தில் இருந்து சுமார் 14 கிலோமீட்டர் பயணம் செய்து குமாரபர்வதா மலையை அடைய வேண்டும். வினோத், நான் மற்றும் பாலா .. .. நான் டிசம்பர்-6 2019 அன்று மதியம் சென்னை சென்ரல் ரயில் நிலையத்தில் இருந்தது மங்களூர் செல்லும் West coast express train-ல் இருந்து எனது பயணத்தை தொடர்ந்தேன்... மேலும் வினோத் தஞ்சாவூரில் இருந்து கோவைக்கு இரவு 8:00 மணிக்கு வந்து நான் பயணித்த West coast express train-ஜ சரியான நேரத்தில் பிடித்தான்... வினோத் அவனுக்கும் எனக்கும் சேர்த்து இரவு உணவாக இட்டிலி கொண்டு வந்திருந்தான்... இரவு ரயில் பயணத்தின்போது நாங்கள் எங்களுடைய பயணத்தையும் மற்றும் பயண கட்டமைப்பு பற்றியும் விவாதித்து வந்தோம்... அதே நேரத்தில் பெங்களூர்  இருந்தது

தாத்தா

பொக்கிஷமய் மௌனித்திருக்கிறது தாத்தாவின் மஞ்சை பை...  வருடங்களின் வருடல்களை சுருக்கைப் பையில் சுருட்டி வைத்ததாய்... காலங்களின் கணங்களை உறைய வைத்த உறவு மூட்டையாய்... தங்கத்தால் இழைத்த தங்க பை  கிடைத்தாலும் தாதாவின்  வெள்ளை நிற ஜிப்பா சட்டை அழகுக்கு ஈடாகாது... புரட்டிப் புரட்டி புடைத்துப் போன  மூக்கு பொடி டப்பா நாசியில் உறுஞ்சும் போது  அது தனி வசீகரம்... தாத்தாவின் சைவ உணவு காட்சி  மாறாமல் மறைந்திருக்கிறது கடவுளைப் போல... தாத்தாவின்  ஜோதிட சாஸ்திரம் வசீகரம் என் பால்யத்தின் பக்கங்களை புதிதாய்க் கொளுத்துகின்றன... அந்த ஜோதிடம் ஒரு திறந்த ரகசியமாய் தியானித்திருக்கிறது... கவலையின் கணக்கு வழக்குகளும், ஆன்மீகமும்  உங்கள் இதயத்தில்  நிரம்பியிருக்கின்றன... சிதற விடாத கவனத்துடன் இதய பக்கங்களைப் புரட்டுகிறேன்... ஒரு கடலைப் புதைத்த கண்ணீர் துளியுடன் அந்த நினைவுகளை  கண்முன்னே  காட்சிகளாக பார்கிறேன்... பார்த்து முடித்து நெஞ்சோடு  சட்டென நிகழ்கிறது சொர்க்கத்தின் சலுகையாய் தாத்தாவின் அரவணைப்பு...!

சனிவார்வாடா (Shaniwarwada)-Pune

  நான் புனேக்கு (Pune) எனது வேலை நிமித்தமாக சென்று இருந்தேன். எனக்கு வேலை பளு அதிகமாக இருந்தாலும் சிறிது நேரம் ஒதுக்கி புனேவை சுற்றி பார்க்க விருப்பமாக இருந்தது. அலுவலகத்தில் பயணத்திற்கான நேரத்தை பெற்று கொண்டு (14.04.2023) அன்று புனேயில் உள்ளூர் முக்கியத்தலங்களைப் பார்க்கச் செல்ல கிளம்பினோம். மொழிப்பிரச்சனையை எப்படிச் சமாளிப்பது என்பதுதான் என்னுடைய தலையாய பிரச்சனை. நான் தங்கி இருக்கும் Hotel விட்டு வெளியில் வந்து பக்கத்தில் உள்ள ஒரு ஆட்டோ ஓட்டுநரிடம் ஆங்கிலம் தெரியுமா என்று கேட்ட போது “இங்கிலீஷ் நை மாலும்”, என்று புன்னகையுடன் கை விரித்து விட்டார்.  பொதுவாகவே புனேயில் மராத்தியும்,  ஹிந்தியும் செல்லுபடியாகிறது. அடுத்து மற்றொருவரைக் கேட்க அவர் அதிர்ஷ்டவசமாக “எஸ் சார், ஐ நோ இங்கிலீஷ் சார்” என்று இன்முகத்துடன் சொல்லவும் காதில் இன்பத் தேன் வந்து பாய்ந்தது.  முதலில் நான் சனிவார்வாடா பயணித்தேன்... இனி சனிவார்வாடா சரித்திரச் சின்னம் குறித்து நான் கண்டவற்றையும் கேட்டவற்றையும் பற்றிப் பார்க்கலாம். சனிவார்வாடா , மகாராஷ்டிர மாநிலத்தின் புனே நகரில் உள்ள ஒரு முக்கியமான சரித்திரச் சின்னமாகும். 1732 ஆம