Skip to main content

வெள்ளியங்கிரி மலை பயணம்...

வெள்ளியங்கிரி மலை பயண அனுபவம்தான் எங்கள் வாழ்க்கையில் அடுத்தடுத்த பயணங்கள் செய்ய வழிவகுத்தது...

நம் வாழ்க்கையில் ஒரு முறையாவது இந்த வெள்ளியங்கிரி மலை பயணம் செய்ய வேண்டும்...
இந்த பூமிப் பிரபஞ்சத்தில் மிகச் சிறந்ததும், புண்ணிய பூமியுமான நம் பாரத தேசம், மிகப் பழமையானதும், சக்திவாய்ந்ததும் ஆகும். எண்ணற்ற மகான்கள் மற்றும் சித்தர்கள் மலைவாழிடங்களில் தங்களின் சக்தியாலும், தவத்தாலும் கணக்கற்ற மலைகளில் கோவில்களும், ஆன்மீக மடங்களும், பீடங்களும் நிறுவி இருக்கின்றார்கள். அங்கு நாம் செல்வதின் மூலம், நாம் நமது மனம், உடல் மற்றும் ஆன்மாவை வலுப்படுத்திக் கொள்ள முடியும். சில இடங்களில் இறைவனே சுயம்புவாக வந்து குடியேறியும் உள்ளார். அப்படி எல்லாம் வல்ல ஈசனாகிய சிவபெருமான் வந்து குடியேறிய இடம் தான் நாம் பார்க்கும் தென் கைலாயம் எனப்படும் வெள்ளியங்கிரி மலை திருத்தலம்.


கோவை அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள வெள்ளியங்கிரி மலை ஒரு வழிபாட்டுத்தலம். ஏழு மலை கடந்து உச்சிக்கு சென்றால் நாம் தரிசிப்பது ஒரு சுயம்பு சிவலிங்கம். ஈஷா யோகா மையம் மற்றும் தியானலிங்கம் இருப்பதும் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் தான்!!
இறைவன் இங்கு ஒரு குகையில் சுயம்புவாக ஒரு பாறை வடிவில் தோன்றி காட்சியளிக்கின்றான். நாம் அந்த தரிசனம் காண இந்த மலைக்கு யாத்திரை செய்வேம். அருமையான சுனைகள், நீருற்றுக்கள், மூலிகை நிறைந்த தண்ணீர் என ஒரு வித்தியாசமான காட்சிகளைப் பார்க்கலாம் வாருங்கள். . நான் இந்த யாத்திரையை தொடக்கத்தில் இருந்து முடிவு வரை ஒரு பயணம் செய்வதைப் போல கூறவுள்ளேன்.
நாம் வழக்கமாக செல்லும் திருப்பதி, பழநி போன்ற மலைகளுக்கு இருக்கற மாதிரி பேருந்துகளோ, வின்ச் சர்வீஸோ வெள்ளியங்கிரி மலைக்கு கிடையாது. இங்கே இருப்பதெல்லாம், "நடைராஜா சர்வீஸ்" தான்!! மேலும், மற்ற வழிபாட்டுத் தலங்களுக்கு எல்லா நாட்களும் போக முடியும். ஆனால், வெள்ளியங்கிரி மலைக்கு பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் மட்டும் தான் செல்ல முடியும். அதுவும் இரவில் தான். பகலில் சென்றால் வெயில் சுட்டெரித்துவிடும். கரடு முரடான பாதையைக் கொண்ட இந்த மலைக்கு மின்சார வெளிச்சம் கிடையாது. நடந்து செல்பவர்களுக்கு இருக்கும் ஒரே ஒளி நிலவொளி தான்!! பௌர்ணமி நாள் (அ) டார்ச் லைட் இருந்தால் பெட்டர்!!
நாம் ஏறும் தடம் பூராவும் மழைக்காலங்களில் தண்ணீர் வழிந்தோடும் பாதையாதலால் கோடை காலத்தில் மட்டும் பயணம் மேற்கொள்ளுகின்றனர் இந்த மாதங்களில் மட்டும் மலை ஏறுவதற்கு ஒரு காரணம் காட்டில் உள்ள யானை, மான், கரடி, காட்டுஎருமை, குரங்கு போன்ற மிருகங்கள் எல்லாம் தண்ணீரைத் தேடி மலைக்குக் கீழே சென்றிருக்குமாம். நொடியில் கடித்து ஆளைக் கொல்லும் மிக விஷம் உடையதும் மிக நிளமானது ஆன இராஜநாகங்கள், கருநாகங்கள் அதிகம் உள்ள மலை இது. மேலும் அட்டைப் பூச்சிகளும் அதிகம்.அடர்ந்த காடு இது. ஆனால் இவற்றில் ஒன்றைக் (அட்டைப் பூச்சிகள், காட்டு அணில், நம்ம ஆளு குரங்கைத் தவிர) கூட நாங்க கண்ணால் பார்க்கவே இல்லை இந்த மாதங்களுக்கு பிறகு என்றால், தென்மேற்குப் பருவ மழை பெய்ய ஆரம்பித்து விடும். கடும்குளிர் காரணமாக குளிர்காலத்திலும் மக்கள் இங்கே போவது கிடையாது.
சபரிமலைப் போலவே இந்த மலையிலும் பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் உள்ளன. பன்னிரண்டு வயதில் இருந்து ஜம்பது வயது வரை உள்ள பெண்கள் இந்த மலையில் ஏற அனுமதி இல்லை. அங்கு யாரும் யாரையும் போகக் கூடாது என்று தடுப்பது இல்லை. ஆனாலும் காலகாலமாய்த் தொடரும் சம்பிரதாயம் இது. மீறி ஏறும் பெண்கள் பல இன்னல்களுக்கு ஆளாகிப் பாதியில் திரும்பி வந்ததாகச் செவி வழிக்கதைகள் கூறுகின்றன.
வினோத் மற்றும்  நான்  இந்த பயணத்தை தமிழ் வருடபிறப்பு சித்திரை மாதம் முதல் நாள் துவங்கினோம்...

வினோத் முதல்நாள் இரவு தாஷ்சாவூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை கோவை வந்தானன்...

நான் காலை சென்னையில் இருந்து நீலகிரி எக்ஸ்பிரஸில் கோவை வந்து வினோத்துடன் சேர்த்து கொண்டேன்...

பிறகு நாங்கள் அருகில் உள்ள விடுதியில் குளிந்துவிட்டு மருதமலை முருகன் கோவில் சென்று தரிசனத்தை முடித்தோம்...
பிறகு பேரூர் பட்டீஸ்வரர்
சென்று தரிசனத்தை முடித்தோம்...
பிறகு பேரூரில் இருந்து பூண்டி என்னும் மலை அடிவாரப் பகுதி செல்லும் பேருந்தில் ஏறி  மாலை 4மணிக்கு பூண்டி என்னும் மலை அடிவாரப் பகுதி அடைந்து மாலைகடன் முடித்துப்  பின்னர் அங்கு அடிவாரத்தில் உள்ள இறைவன் வெள்ளியங்கிரி ஆண்டவர், பார்வதி, விநாயகர் மற்றும் முருகன் ஆகியோரை வணங்கி விட்டு, ஒரு மணி நேர ஓய்வுக்குப் பின்னர் மலைப் பயணத்தை ஆரம்பித்தோம். 
இது முதல் மற்றும் புது அனுபவம். எங்குமே உடல் வளையாத நாங்கள் இந்த யாத்திரைக்கு வந்ததே அதிசயம் தான். எனக்கு சபரிமலை ஏறிய அனுபவங்கள் இருந்தாலும் நான் கேள்விபட்டது வரை இந்த யாத்திரை சிறிது கடினம் தான்...
நிலவொளியில் எங்கள் மலை ஏற்றம் மற்றும் கரடு முரடான மலைப்பாதை என கேட்க சுவாரஸ்யமா இருக்கா...?
இத விட சுவாரஸ்யம் மலைப்பாதை தான். ஒவ்வொரு மலையும் ஒவ்வொரு விதம். இப்படி மலை ஏறுவதுக்கு முன்னாடி 6 அடி உயரம் உள்ள ஒரு மூங்கில் குச்சியை வாங்கறது (அ) மலையில் ஒடிக்கறது மிக மிக அவசியம்!! இரவு முழுக்க ஏழுமலை ஏறிக் காலை சூரிய உதயத்தின் போது மலை மீது உள்ள வெள்ளியங்கிரி ஈசனின் அற்புத தரிசனம் காண்பதுதான் பயணத்தின் நோக்கம்.
அந்த மலைகளில் நாம் தரிசிப்பது வரிசையாக :

1. வெள்ளைப் பிள்ளையார் கோவில்,
2. பாம்பாட்டி சுனை,
3. கைதட்டி சுனை,
4. சீதாவனம் அல்லது விபூதி மலை,
5. ஆண்டி சுனை,
6. ஒட்டன் சமாதி,
7. சுவாமிமலை.
முதல் மலை ஏற ஆரம்பித்தால், லேசாக வியர்க்க ஆரம்பிக்கும். முதல் மலை முழுவதும், ஏறக்குறைய மூவாயிரம் கரடு முரடான, உருக்குலைந்த கற்களால் ஆன படிக்கட்டுகள் இருக்கும். ஒவ்வொரு படியும் அரை அடி முதல் ஒரு அடி வரை உயரம் இருக்கும். 
ஒரு அரை மணி கழிந்த பிறகு நாம் அணிந்திருக்கும் பனியன், சட்டை எல்லாம் கசக்கிப் பிழியும் அளவிற்கு வியர்த்து விடும். முதல் மலை மட்டும் ஒரு மூன்று பழநி மலை அளவிற்கு உயரம் இருக்கும். . நாம் முதலில் வெள்ளைப்பிள்ளையார் கோவிலுக்குச் செல்வோம். 
இங்கு இருக்கும் விநாயகர் கோவில் வெள்ளை வர்ணம் உடையதாலும், பிள்ளையார் முழுக்க விபூதி பூசப்பட்டு, வெள்ளையாக காட்சி தருவதால் வெள்ளைப்பிள்ளையார் கோவில் என்று அழைக்கப் படுகின்றது. இந்தக் கோவிலை அடைவதுதான் நம் பிரயாணத்தில் மிகவும் கடினமான பகுதி. செங்குத்தான படிகள். மழையில் சீர்குழைந்து இருக்கும். அப்போதுதான் ஏற ஆரம்பித்து இருப்பதால் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கும். இதில் ஏறுவதுக்கு அதிக நேரம் பிடிக்கும். 
அப்படியே, ஏறி வரும் போது நாங்கள் புலம்ப ஆரம்பித்து விட்டோம்...” 

வினோத் இன்னும் முதல் மலையே முடியல. என்னால முடியல.. இன்னும் எவ்ளோ தூரம் டா!!" என்பது தான். 
 “Volini pain gel” கொண்டு வந்ததால் தப்பித்தோன். 
ஒரு அரை மணி நேர ஓய்வுக்குப் பின்னர் மலைப் பயணத்தை ஆரம்பித்தோம். இரவு ஏழு மணியளவில், எங்களின் அடுத்த கட்டமான பாம்பாட்டி சுனை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். 
அந்த இருளில் கையில் டார்ச்சு லைட்டுடன் எங்களின் பயணம் தொடர்ந்தது. ரெண்டாவது மலைக்கு வந்துட்டோம்கறது, படிகள் குறைய ஆரம்பிக்கறதுல இருந்து தெரிஞ்சுக்கலாம். ரெண்டாவது மற்றும் மூணாவது மலை முழுவதும் வழுக்குப் பாறைகளை செதுக்கி படிகள் கட்டி விட்டுருப்பாங்க. 
இது மாதிரி வழுக்கப் பாதைகளில் விழுந்திராமல் இருக்கத்தான் மூங்கில் குச்சிய வாங்க சொல்றது. இனி வெள்ளைப் பிள்ளையார் கோவிலில் இருந்து பாம்பாட்டி சுனை, மற்றும் கைதட்டி சுனை, சீதாவனம் வரை, நூறடிகளுக்கு மலைப்பாதையும்,பின்னர் பத்துப் பத்துப் படிகளும் இருக்கும். பாதையும், படிகளும் மழையினால் ஏற்ற இறக்கமாகவும், சீர்குழைந்தும் இருக்கும். மெதுவாகவும்,பார்த்தும் நடக்க வேண்டும். சில சமயம் பாறைகளின் மீது நடக்கும் போது அது வழவழப்பாக இருந்தால், நல்லாக் காலை ஊன்றிப், பின்னர் மறுகாலை எடுத்து வைக்க வேண்டும். வழுக்கி விடாமல் கவனமாக நடக்க வேண்டும். கையில் ஊன்று கோலை ஊன்றி முட்டுக் கொடுத்து, ஏறி இறங்க வேண்டும். இப்படியாக நாங்கள் பாம்பாட்டி சுனையை அடைந்தோம். 

அப்போது கீழே இறங்கும் பெரியவர் ஒருவர் மேலே குளிர் அதிகம், ஆகவே கைதட்டி சுனை அருகே சென்று ஓய்வெடுக்குமாறு  என அறிவுறுத்தினார். 
பாம்பாட்டி சுனை என்பது பாறைகளின் இடையில் கசிந்து வரும் தண்ணீர் ஆகும். நல்ல சுவையான, தெளிந்த சுத்தமான தண்ணீர், இங்கு மினரல் வாட்டர் போல காசில்லாமல் கிடைக்கும். இந்த தண்ணீர் தாகம் தீர்ப்பதுடன் ஆரோக்கியத்தையும், நிறைவையும் தரும். நாங்கள் காபி வடிகட்டி கொண்டு சென்றதால் நீரை சிறிது குப்பையின்றி வடிகட்டி பிடித்து குடித்து விட்டு கொண்டு சென்ற வாட்டர் கேன்களில் பிடித்து வைத்துக்கொண்டோம். இந்த சுனையில், நீர் வரும் பாதையில் மூங்கில் குச்சியை பிளந்து (மூங்கில் தப்பை) சொருகி இருப்பார்கள். அதில் பைப்பில் வருவது போல தண்ணீர் நில்லாமல் கொட்டிக் கொண்டு இருக்கும். சுனையில் தண்ணீர் வரும் பாறையின் அருகில் காதை வைத்துக் கேட்டால் பாம்பு சீறுவதைப் போல உஷ், உஷ் என்ற சத்தம் கேக்கும். ஆதலால் இதுக்கு பாம்பாட்டி சுனை என்ற பெயர் வந்தது. அரைமணி நேர ஓய்வுக்குப் பின்னர் நாங்கள் கைதட்டி சுனை நோக்கிப் பயணத்தை தொடர்ந்தோம்
இரவு கைதட்டி சுனை அடைந்து, அங்கு சிறுது நேரம் ஓய்வு எடுத்தோம். கைதட்டி சுனை என்பது மூன்று பெரிய பாறைகளுக்கு நடுவில் ஒரு மூங்கில் தப்பையைச் சொருகி வைத்துருப்பார்கள். அதில் குழாயில் கொட்டுவது போல தண்ணீர் கொட்டும். இந்த தண்ணீர் பாம்பாட்டி சுனைத் தண்ணீரை வீட அதிகமாகவும், சுவையாகவும் இருக்கும். கை தட்டினால் தண்ணீர் வேகமாக வரும் எனக் கதையும் உண்டு. 
 பிறகு வினோத் கொண்டு வந்த புளியோதரையை ஒரு கட்டு கட்டினோம். நல்ல குளிர் வேறு. நடந்த போது எதுவும் தெரியவில்லை. பெரியவர் சொன்னது போல் இரவு தங்கிவிட்டு காலை மேலே செல்லலாமா..? என யோசித்த்தோம்...

நான் சுருண்ட கோழி போல் உடலை சுருட்டிக்கொண்டேன். 
கடைசியில் ஒரு மனதாக மேலே செல்லலாம் என முடிவெடுத்து ஒரு மணி நேர ஓய்வுக்குப் பின்னர் அங்கு இருந்து சீதாவனம் அல்லது வீபூதி மலை நோக்கிப் பயணத்தை தொடர்ந்தோம். நடக்க ஆரம்பித்தவுடன் குளிர் தெரியாமல் லேசாக வியர்த்தது. நடக்கும் போதே குளிர ஆரம்பிச்சதுன்னா நாம நாலாவது மலைக்கு வந்துட்டோம்னு அர்த்தம். இந்த மலை முழுவதும் மரங்களின் வேர்களுக்கு நடுவே தான் பாதை அமைந்திருக்கும். நிலவொளியில், குளிர்காற்றை சுவாசித்துக் கொண்டு, மரங்களின் நடுவே செல்வது ஒரு அருமையான அனுபவம். அடர்ந்த மரங்களின் நடுவே சென்ற பயணம். 
 டார்ச் உதவியால் .இரவில் மலை ஏறினோம்....

மேலும் நிலா வெளிச்சம் நாங்கள் மலை ஏறுவதர்ங்கும சிறப்பாக இருந்தது...
இங்கு ஒரு கடை இருக்கும், பட்டாணி, மிக்சர், நிலக்கடலை போன்றவற்றை விற்பார்கள். முலிகையால் தயாரிக்கப்பட்ட சூப் சூடாக தந்தார்கள். குளிருக்கு மிக இதமாக இருந்ததால் நாங்கள் இரண்டு டம்ளர் வாங்கி குடித்தோம். விலைதான் ஒவ்வோன்றும் இரட்டிப்பு. ஆனால் வேறு வழியில்லை. இந்த காட்டில் இவ்வளவு உயரத்தில் இது கிடைப்பதே கடினம்.
மரங்களின் அடர்த்தி குறைய ஆரம்பித்து "சோலா" எனப்படும் சிறிய தாவரங்களைப் பார்க்க நேர்ந்தால், நாம் கடப்பது ஐந்தாவது மலையை என்று அர்த்தம்!! ஐந்தாவது மலை முழுவதும் சேறு போன்ற வழுவழுப்பான மண்ணப் பார்க்கலாம். . வழுக்குப் பாறை என்னும் மலை. ஒரு அடர்ந்த காட்டை உடைய மலையின் சரிவில் உள்ள பாறை முடிவுதான் இந்த வழுக்குப் பாறை. பெயருக்கு ஏற்ற சரிவும், வழவழப்பும் கூடியது இந்தப் பாறை. 
மரங்களற்று பெரிய பாறையில் சிறிய அளவில் படிகள் போன்று செதுக்கிய அமைப்பை உடையது. இந்தப் பாறையைக் காலையில், அல்லது மாலையில் கடப்பது சுலபம். வெய்யிலில் ஏறினால் கால் கொப்பளித்து விடும். இந்த இடத்தைக் கடந்து சிறிது தூரம் மலை ஏறினால் நாம் சீதாவனத்தை அடையலாம். இந்த இடம் சீதாவனம் என்று அழைக்கப்படும் காரணம் எதுவும் தெரியாது. 
தொன்றுதொட்டு வரும் பெயர். ஆனால் வீபூதி மலை என்று அழைக்கப்படும் காரணம். இந்த மலையில் மண்ணை சிறிது கிளறி விட்டுப் பார்த்தால் வெள்ளை ஜிப்சம் மண் கிடைக்கும். இதை அந்தக் காலத்தில் வீபூதியாக மக்கள் எடுத்துச் செல்வார்கள். மருத்துவ குணம் உடையது. இதற்காக நம் மக்கள் அங்கு தோண்டித் தோண்டி அந்த மலை மிகவும் குண்டும் குழியுமாக இருக்கும். மழையில் அரித்து அங்கு ஏற்ற இறக்கமாக இருக்கும். ஆதலால் மிக கவனமாக நடக்க வேண்டும்.கொஞ்சம் தடுமாறினாலும் கீழே விழுந்து கால் சுளுக்கிக் கொள்ளும். ஒருபுறம் அடர்ந்த காடும், மறுபுறம் அபாயமான மலைச் சரிவும் கொண்டது. இங்கே நன்றாக குளிரவும் ஆரம்பிக்கும்.
ஐந்தாவது மலையில் இருந்து ஆறாவது மலைக்கு உட்கார்ந்தும் டேக்கியும் தான் போகனும். ஏன்னா, ஆறாவது மலைக்குச் செல்ல செங்குத்தாக கீழே இறங்கி போக வேண்டும். கீழே இறங்கும் போது, அப்படியே அண்ணாந்து மேலே பார்த்தா, கண்ணுக்கு எட்டுன தூரம் வரைக்கும் "மின்மினி பூச்சி" மாதிரி வெளிச்சம் தெரியும். ஏழாவது மலையில் நமக்கு முன்னாடி ஏறீட்டு இறக்கறவங்க அடிக்கற "டார்ச் லைட்" வெளிச்சம் தான் அது மிகப் பெரிய பாறைகளை கொண்ட வளைந்து வளைந்து ஏற்றம் மற்றும் இறக்கங்களைக் கொண்ட சீதாவனத்தைக் கடந்தால் வருவது ஆண்டி சுனை. இதுஆறாவது மலை
இங்கே, வியர்வை எல்லாம் போகற மாதிரி ஒரு காக்கா குளியல போட வேண்டியது தான். உறையற அளவு குளிர்ல எங்க நிதானமா குளிக்கறது? ஆண்டி சுனை என்பது காட்டுக்குள் இருந்து ஓடிவரும் காட்டாறு. இது மழைக்காலத்தில் காட்டாற்று வெள்ளமாகவும், நாங்கள் போகும் காலங்களில் சிறு வாய்க்கால் போல விளங்கும். இதில் இந்த இடத்தில் அதனுடன் பாறைகளுக்கு அடியிலும் நீர் சுரக்கும். மிகவும் குளிர்ந்த நீர். தண்ணீர். அதிகம் ஓட்டம் இல்லாமல் தடுத்து நிறுத்தி இருப்பதால், மிகவும் குளிர்ந்து, அப்பத்தான் பிரிட்ஜ்ஜில் இருந்து எடுத்த தண்ணீர் போல இருக்கும். அதில் இறங்கும் முன்னர் நாம் கொஞ்சம் தண்ணீரைக் கை,கால்களில் நனைத்துக் கொண்டால், உடல் சமனிலை அடைந்தவுடன் குளிக்கலாம். அது இல்லாமல் எடுத்தவுடன் தண்ணீரில் முங்கினால், சில சமயம் விறைத்துக் கூடப்போகலாம். அதிக ஆழம் இல்லாமல் முழங்கால் வரை தேங்கிய தண்ணீர் இருக்கும். நல்ல அற்புதமான தண்ணீர், ஆனால் இதன் ஓரங்களில் நிற்கும் போதும்,சுனையில் தண்ணீர் பிடிக்கும் போதும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த சுனையில் அட்டைப் பூச்சிகள் அதிகம். கடித்தால் தெரியாது. ஆனால் காயம் ஆறுவது மிகவும் சிரமம். சுண்ணாம்பு, தீப்பெட்டி எடுத்து செல்வது நல்லது. சுண்ணாம்பு தடவினாலும், தீக்குச்சி சூட்டுக்கும் தான் கடிக்கும் அட்டைப்பூச்சி நம் உடலை விடும்.
இங்கு சிறிது ஏற்ற இறக்கமாகவும்,சுற்றிலும் அடர்ந்த வனங்கள், பூக்கள்,மூலிகைச் செடிகள்,மரங்கள்,பாறைகள் நிறைந்த இடங்கள். இங்கு பல இடங்களில் குகைகள் உள்ளன. இங்குள்ள தும்பை,கொன்றை மலர்ச் செடிகளின் அழகும்,மணமும் மிக அழகாக இருக்கும். மலைகளின் சரிவுகள் நம்மை பிரமிக்க வைக்கும். நாம் இங்கு மலையின் ஒருபுறம் கோவை மாநகரின் அழகும்,மறுபுறம் கேரளாவின் பாலக்காட்டின் அழகும் அற்புதமாக இருக்கும். இரவில் தெரியும் மின்விளக்குகளின் அழகு அதி அற்புதம். இந்த மலையின் சரிவில் கோவை மாநகரின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணீ நதியின் தண்ணீர் கேட்ச்மெண்ட் ஏரியா என்னும் அழகிய நீர்பிடிப்புப் பகுதிகளையும், அணையையும் காணலாம். சுணையை விட்டு மேல் வர இங்கு ஒரு கடை இருக்கும், சூடாக பால் இல்லாத சுக்கு டீ, மற்றும் சுக்கு காப்பி கிடைக்கும் பாருங்க. அந்தக் குளிர்ல, சுக்குக் காப்பிக்கு நிகர் வேறெதுவும் கிடையாது. அதிகாலை ஒரு மணி, உங்க நண்பர்களுடன் நிலவொளியில் மலையேற்றம் , குளிர்ந்த மூலிகைக்காற்று, குளிர்க்கு இதமா சுக்குக்காப்பினு யோசிச்சுப் பாருங்க?
அழகுதான் ஆபத்து என்று சொல்வது போல, இந்த மலையில் இந்த அழகிய இடம்தான் மிகவும் ஆபத்தான இடம். இங்கு வனவிலங்குகள் அதிகம் என்றாலும் யாரும் அவை தாக்கி இறந்தது கிடையாது. ஆனால் இங்கு அவ்வப்போது கனத்த ஊய் என்ற ஓசையுடன் அடிக்கும் பனிப்புயல் ஒன்றுதான் இங்கு ஆபத்தானது. இந்தப் பனிப்புயலில் கனத்த உடலை ஊடுருவும் குளிர் காற்று புயல் போல சுழன்று அடிக்கும். நமது நெஞ்சை ஊடுருவி அடிக்கும் காற்று இதயத்தை உறைய வைக்கும். சில சமயம் நம்மை விறைப்படையச் செய்ய வைக்கும். இந்தப் பனிப்புயல் அடிக்கும் போது அனுபவம் மிக்கவர்கள் அங்கு இருக்கும் குகைகளில் சென்று பதுங்கிக் கொள்வார்கள். இல்லை என்றால் காற்று அடிக்கும் திசையில் பாறைகளின் பின்னால் குறுகி உட்கார்ந்து கொள்வார்கள்.
 
இந்தப் பாதையில் செல்லும் வழியில் ஜந்து உருண்டைப் பாறைகள் இருக்கும், ஒரு பாறை மிகவும் பெரிய உருண்டையாகவும், இன்னெருப் பாறை அதை வீடச் சின்னதாக ஒழுங்கற்றும் இருக்கும். இதில் பெரிய பாறை பீமன் களியுருண்டை எனவும், சிறிய பாறை அர்ச்சுனன் தவப்பாறை எனவும் அழைக்கப் படுகின்றது. இது அவர்கள் வன வாசத்தின் போது அவர்களின் உணவு இது என்றும், அது பாறையாக மாறிவிட்டது எனவும் கூறுகின்றார்கள்.
நாங்கள் நள்ளிரவு இரண்டு மணிக்கு பனிஊதக்காற்றில் மாட்டிக்கொண்டோம். இரண்டடி முன் நடப்பவர்களும், பாதையும் கண்களுக்கு தெரியவில்லை. சரியான குளிர் பனி வேறு. அருகில் இருந்த அர்ச்சுனன் தவப்பாறை குகையில், என்ன செய்வது, சமாளிப்போம் என்று தங்க முடிவு செய்தோம். படுத்த சில விநாடிகளில் என்னால் கால் நிட்ட முடியவில்லை. உடல் பாறைக்கு அடியில். கால்களோ வெளியில். விரைத்து விட்டது. எனது உடல் நடுங்க ஆரம்பித்தது. நான் கொண்டு சென்ற போர்வையால் என்ன சுற்றி கொண்டேன்.
நான் என் கைகள் இரண்டையும் பரபரவென தேய்த்து என் முகம்,மார்பு என தேய்த்து சூடு படுத்தினேன். கொஞ்சம் நல்லா இருந்தாலும் நடுக்கம் குறையவில்லை. எழுந்து உட்கார்ந்து கை,கால்களையும் தேய்த்து விட்டேன. கை,கால்கள் எல்லாம் விரைக்கும் வண்ணம், பற்கள் நடுநடுங்கின. நான் சுருண்டு படுத்துக் கொண்டேன். ஆனாலும் குளிர் என் கை, கால் எல்லாம் ஆயிரம் ஆயிரம் ஊசிகள் குத்துவது போல வலி எடுத்தது. இதுவும் ஒரு நல்ல வித்தியாசமான அனுபவம்.
ஒரு சுக்கு காபி அடித்து விட்டு பிறகு நாங்கள்  7வது மலையான சுவாமி மலை யாத்திரைக்காக கிளம்ப ஆரம்பித்தோம்.
 இந்த சுவாமி மலை மிக செங்குத்தாக மிக உயரமான, ஒரு புறம் சரிவாகவும், மறுபுறம் மிக ஆழமான பள்ளத்தாக்கும், அடர்ந்த காடும் உடையது. இது செல்லும் வழியில் தான் ஒட்டன் சமாதி என்று ஒருவர் சமாதி உள்ளது. நாங்கள் பாதையை விட பக்கத்தில் இருந்த புற்களின் மீதுதான் நடந்ததோம். தடியை நன்கு ஊன்றிக் கவனமாக நடக்க வேண்டி இருந்ததால் மிகவும் மெதுவாகவும், பொறுமையாகவும் ஏறினோம். வழியில் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த குரூப் ஒன்று வந்தது. அவர்கள் கடந்த 9 வருடங்களாக வருடத்திற்கு 2 முறை வருவதாகவும், சாமியை சித்தர் வடிவில் கண்டிருப்பதாகவும், அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் (அதிகாலை 4 மணி) வந்தால் சில சித்தர்கள் மனித உருவிலும், நாகம், அணில் போன்ற உருவங்களிலும் வந்து லிங்கத்தை சுற்றி வந்து பூஜை செய்வார்கள் என கூறியது ஆச்சரியமாகவும், அதிசயமாகவும் இருந்தது. இந்த உச்சியில் இரு மிகவும் பெரிய பாறைகள் ஒன்றுடன் ஒன்று மோதி சரியாமல் கோபுரம் போல இருக்கும். இதன் அடியில் இடைவெளி இருக்கும். இங்கு செயற்கையாக செய்யப் பட்ட லிங்கங்கள் கோவில் போல வைத்து வணங்குவார்கள்.
இதில் ஒரு பெரிய பாறையின் அடிப்பகுதியில் தான் ஒரு குகை உள்ளது. இந்த குகையில் ஒரு மொட்டுப் பாறை போன்ற லிங்கத்தின் மேற்ப்பகுதிதான் வெள்ளியங்கிரிஸ்வரர் என அகத்திய மாமுனிவரால் வணங்கப்பட்ட சுயம்புலிங்கம் உள்ளது.
இங்கும் செயற்கை லிங்கம் ஒன்றும் பிரஸ்திஸ்டை செய்யப் பட்டுள்ளது. வெள்ளியங்கிரி ஆண்டவரின் சன்னதி, இரண்டு கற்களுக்கு நடுவே அமைந்திருக்கும். அங்கே ஒரு சின்ன சிவலிங்கம், ஒருவர் தீப ஆராதனை காட்டி திருநீறு தருவார்.
சிலர் வேண்டுதலுக்காக வேல் செய்து கொண்டு வந்து நட்டிவைத்து செல்வார்கள். 
இறைவன் சன்னதியில் இருந்து வெளியே வரும்போது, நமது உடலும் உள்ளமும் சுத்தமாக இருப்பதை உணர முடியும்.

மலையில் சுயம்பு நந்தி போன்ற உருவத்தை கண்டபின்னர் நாங்கள் கிழே நள்ளிரவில் 2மணி அளவில் இறங்க ஆரம்பித்தோம். 
அப்படியே மலையில் இருந்து கீழே இறங்க ஆரம்பித்தால், இரவில் தடவிக்கொண்டே வந்ததெல்லாம் பச்சைப்பசேல். இவ்வளவு தூரம் நடந்து வந்தோமா என வியப்பு. கடை அருகில் சுக்கு காப்பி, எனர்ஜிக்கு குளுக்கோஸ் என குடித்துக்கொண்டே நடந்தோம். பசிக்கு ஆரஞ்சு பழம்.  பின் நாங்கள் பக்தி பரவசம் பொங்க கடவுளை வழிபட்டுகாலை 10:30 அளவில் கீழே அடிவாரம் வந்தடைந்தோம்.

வெள்ளியங்கிரி மலைப் பயணம், ஆத்திகர்களுக்கு இறைவனை இயற்கையுடன் தரிசிக்கும் ஒரு அருமையான வாய்ப்பாக இருக்கும். நாத்திகர்களுக்கு, மலையேற்றப் பயிற்சியாகவும், இயற்கையின் அருமையை உணரவும் நல்ல வாய்ப்பாக இருக்கும்!! எதுவாக இருந்தாலும் நல்லது தானே!!

டிப்ஸ் :

1)       மலையாத்திரைக்குச் செல்ல அவசியமானவைகளை டிப்ஸாக செல்கின்றேன். ஒரு தோல் பை ஒன்றும், Volini pain gel / Spray, தண்ணீர் குடிக்க இரண்டு பிளாஸ்டிக் வாட்டர் கேனும் எடுக்கவும் நல்ல பெரிய டார்ச் லைட் மற்றும் புதிய பாட்டரிகள் பொருத்தப் பட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்(இரவில் ஏறினால்). மழை பெய்தாலே, அல்லது இரவில் தங்கினால் படுக்க பாலித்தீன் ஷீட் அல்லது உரச் சாக்கு எடுத்துக் கொள்ளவும். வழியில் தொண்டை வறட்சிக்கு ஆரஞ்சு மிட்டாய், ஆரஞ்சு, ஆப்பிள், குளுக்கோஸ் பாக்கெட் எடுத்துக் கொள்ளவும்

2)      உணவுக்குக் கூடுமான வரையில் வயிற்றுக்கு பிரச்சினை தராத காரமற்ற உணவுகள் நன்று. கால் அல்லது அரை வயிறு உணவு சிறந்தது. மலை அடிவாரத்தில் தான் கழிப்பிடம் உள்ளது. மலை ஏறினால் அடுத்த நாள்தான் மீண்டும் வர முடியும். ஆதலால் உணவுக் கட்டுப் பாடு அவசியம். இல்லாவிட்டால் சுனை அருகில் உள்ள காட்டுப் பகுதிக்குத்தான் செல்லவேண்டும்.

3)      காதுக்கு மப்ளரும், ஸ்வெட்டர் ஒன்றும் எடுத்துக் கொள்ளவும். அல்லது கனமான டீ ஸர்ட் போடவும். மலை ஏறும் போது வெற்று உடம்பும், தங்கும் போது டீ ஸ்ர்ட்டும் போட்டுக் கொள்ளலாம். நடக்கும் போது மிகவும் வேர்க்கும், தொண்டை வறளும். நிற்கும் போதும், தங்கும் போதும் மிகவும் குளிரும் இடம் அது. ஏற, இறங்குவதற்கு ஊன்று கோல் மிக அவசியம். இது நம் காலின் சுமையைக் குறைப்பதுடன், கால் ஆடுதசையின் பிடிப்பைக் குறைக்கும். குச்சி இல்லாமல் பயணம் செய்தால் விழுவதற்க்கு அதிகமான சாத்தியங்களும், அடுத்த ஒரு வாரம் கால் பிடிப்பும் நிச்சயம். குண்டானவர்கள், தொப்பை உடையவர்கள், உடல் எடை அதிகம் உள்ளவர்கள் செங்குத்தாக இறங்கும் போது முன்னேக்கி விழ வாய்ப்புக்கள் அதிகம். ஆதலால் அவர்கள் இறங்கும் போது முன்புறமாக தடியைக் குறுக்கு வாட்டில்(கவனிக்கவும் உடலின் முன், உடலுக்கு குறுக்கு வாட்டில்) ஊன்றி இறங்கவும்.

4)     அடிவாரக் கோவிலின் அருகில் இருட்டுப் பள்ளக் காட்டில் ஒரு ஓடை உள்ளது. இங்கு சுதந்திர விரும்பிகளான நம் மக்கள் தமது கடன் கழிக்க, குளிக்கச் செல்வார்கள்.

5)     இது போன்ற மலைப் பிராயனத்தில் ஓய்வு எடுக்கும் போது கால்களை மடித்து அமரக் கூடாது. அப்படி அமர்ந்தால் தொடை அல்லது கெண்டைகால் ஆடுதசைப் பிடிப்பு ஏற்ப்படும். கூடுமான வரையில் கால்கள் தளர்வாக நன்று நீட்டி அமரவேண்டும்.

Comments

Popular posts from this blog

குமார பர்வதம் இனிமையான ஒரு பயண அனுபவம்

குமாரபர்வதம் என்பது மேற்குதொடர்ச்சி மலையில் குடகுமலையில் இரண்டாவது உயர்ந்த சிகரம். கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து மேலும் ஒரு 100 கிலோ மீட்டர் பயணம் செய்து இந்த குமார பர்வத மலையின் அடிவாரம் குக்கே சுப்பிரமணியா என்ற இடத்தை அடைந்தால் அங்கே தமிழ்நாட்டில் இருக்கும் பழனி கோவில் போன்று முருகனுக்கு ஒரு கோவில் இருக்கிறது. அதன் அடிவாரத்தில் இருந்து சுமார் 14 கிலோமீட்டர் பயணம் செய்து குமாரபர்வதா மலையை அடைய வேண்டும். வினோத், நான் மற்றும் பாலா .. .. நான் டிசம்பர்-6 2019 அன்று மதியம் சென்னை சென்ரல் ரயில் நிலையத்தில் இருந்தது மங்களூர் செல்லும் West coast express train-ல் இருந்து எனது பயணத்தை தொடர்ந்தேன்... மேலும் வினோத் தஞ்சாவூரில் இருந்து கோவைக்கு இரவு 8:00 மணிக்கு வந்து நான் பயணித்த West coast express train-ஜ சரியான நேரத்தில் பிடித்தான்... வினோத் அவனுக்கும் எனக்கும் சேர்த்து இரவு உணவாக இட்டிலி கொண்டு வந்திருந்தான்... இரவு ரயில் பயணத்தின்போது நாங்கள் எங்களுடைய பயணத்தையும் மற்றும் பயண கட்டமைப்பு பற்றியும் விவாதித்து வந்தோம்... அதே நேரத்தில் பெங்களூர்  இருந்தது

தாத்தா

பொக்கிஷமய் மௌனித்திருக்கிறது தாத்தாவின் மஞ்சை பை...  வருடங்களின் வருடல்களை சுருக்கைப் பையில் சுருட்டி வைத்ததாய்... காலங்களின் கணங்களை உறைய வைத்த உறவு மூட்டையாய்... தங்கத்தால் இழைத்த தங்க பை  கிடைத்தாலும் தாதாவின்  வெள்ளை நிற ஜிப்பா சட்டை அழகுக்கு ஈடாகாது... புரட்டிப் புரட்டி புடைத்துப் போன  மூக்கு பொடி டப்பா நாசியில் உறுஞ்சும் போது  அது தனி வசீகரம்... தாத்தாவின் சைவ உணவு காட்சி  மாறாமல் மறைந்திருக்கிறது கடவுளைப் போல... தாத்தாவின்  ஜோதிட சாஸ்திரம் வசீகரம் என் பால்யத்தின் பக்கங்களை புதிதாய்க் கொளுத்துகின்றன... அந்த ஜோதிடம் ஒரு திறந்த ரகசியமாய் தியானித்திருக்கிறது... கவலையின் கணக்கு வழக்குகளும், ஆன்மீகமும்  உங்கள் இதயத்தில்  நிரம்பியிருக்கின்றன... சிதற விடாத கவனத்துடன் இதய பக்கங்களைப் புரட்டுகிறேன்... ஒரு கடலைப் புதைத்த கண்ணீர் துளியுடன் அந்த நினைவுகளை  கண்முன்னே  காட்சிகளாக பார்கிறேன்... பார்த்து முடித்து நெஞ்சோடு  சட்டென நிகழ்கிறது சொர்க்கத்தின் சலுகையாய் தாத்தாவின் அரவணைப்பு...!

சனிவார்வாடா (Shaniwarwada)-Pune

  நான் புனேக்கு (Pune) எனது வேலை நிமித்தமாக சென்று இருந்தேன். எனக்கு வேலை பளு அதிகமாக இருந்தாலும் சிறிது நேரம் ஒதுக்கி புனேவை சுற்றி பார்க்க விருப்பமாக இருந்தது. அலுவலகத்தில் பயணத்திற்கான நேரத்தை பெற்று கொண்டு (14.04.2023) அன்று புனேயில் உள்ளூர் முக்கியத்தலங்களைப் பார்க்கச் செல்ல கிளம்பினோம். மொழிப்பிரச்சனையை எப்படிச் சமாளிப்பது என்பதுதான் என்னுடைய தலையாய பிரச்சனை. நான் தங்கி இருக்கும் Hotel விட்டு வெளியில் வந்து பக்கத்தில் உள்ள ஒரு ஆட்டோ ஓட்டுநரிடம் ஆங்கிலம் தெரியுமா என்று கேட்ட போது “இங்கிலீஷ் நை மாலும்”, என்று புன்னகையுடன் கை விரித்து விட்டார்.  பொதுவாகவே புனேயில் மராத்தியும்,  ஹிந்தியும் செல்லுபடியாகிறது. அடுத்து மற்றொருவரைக் கேட்க அவர் அதிர்ஷ்டவசமாக “எஸ் சார், ஐ நோ இங்கிலீஷ் சார்” என்று இன்முகத்துடன் சொல்லவும் காதில் இன்பத் தேன் வந்து பாய்ந்தது.  முதலில் நான் சனிவார்வாடா பயணித்தேன்... இனி சனிவார்வாடா சரித்திரச் சின்னம் குறித்து நான் கண்டவற்றையும் கேட்டவற்றையும் பற்றிப் பார்க்கலாம். சனிவார்வாடா , மகாராஷ்டிர மாநிலத்தின் புனே நகரில் உள்ள ஒரு முக்கியமான சரித்திரச் சின்னமாகும். 1732 ஆம