Skip to main content

மகான்கள்

 🙏🏼🔥#மகான்கள்...🙏🏼

 

🔥🙏🏼#மாணிக்கவாசகர்..


#மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர்கள் நால்வருள் ஒருவர். சிவனடியார்கள் பலர் இருந்தாலும் சிவனுக்கு மிக நெருக்கமானவர்களுள் முக்கியமானவர். இவர் பாண்டிவள நாட்டில் வைகை ஆற்றங்கரையிலுள்ள திருவாதவூர் என்னும் ஊரில் அமாத்தியர் மரபில் சம்புபாத சரிதருக்கும், சிவஞானவதிக்கும் மகனாகப் பிறந்தார். 


🙏🏼#இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் வாதவூரர் என்பதாகும். இவர் 9ம் நூற்றாண்டைச் சார்ந்தவர். பதினாறு ஆண்டுகள் நிரம்புமுன் இவர் கல்வி, கேள்வி, ஒழுக்கம், அறிவு, ஆற்றல் இவற்றில் சிறந்து விளங்கினார். இவர் வேத வித்தகர். நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை, எப்பொழுதும் கூறிக் கொண்டிருப்பார். இவரது அறிவாற்றலைக் கேள்விப்பட்ட மன்னன் அரிமர்த்தன பாண்டியன், இவரை வரவழைத்து அமைச்சர் பதவியை அளித்து தென்னவன் பிரமராயன் என்ற பட்டத்தையும் அளித்தான். உயர்ந்த பதவி, செல்வம் அனைத்தும் இருந்தும் இவை வாழ்வின் இறுதி நோக்கமல்ல என்பதை உணர்ந்து சைவ சித்தாந்தத்தை ஆராய்ந்து சிவ வழிபாட்டை பின்பற்றினார். 🙏🏼


🐎🔥#ஒருசமயம், சோழநாட்டில் நல்ல குதிரைகள் வந்திருக்கின்றன என்று கேள்விப்பட்ட மன்னன் வாதவூராரை குதிரைகள் வாங்கி வரும்படி பணித்தான். அதற்குத் தேவையான பொன்னைக் களஞ்சியத்தில் இருந்து எடுத்துக் கொண்டு படைவீரர்களுடன் புறப்பட்டார். இதைத் தான் எதிர்பார்த்தேன் என்பது போல, சிவபெருமான் தன் திருவிளையாடலை நிகழ்த்த ஆரம்பித்து விட்டார். 


🔥#அவர்_ஒரு குருவைப் போல வேடம் பூண்டு திருப்பெருந்துறை என்னும் தலத்தில் போய் ஒரு குருந்த மரத்தடியில் அமர்ந்து கொண்டார். திருப்பெருந்துறையை அடைந்து விட்ட வாதவூரார் அங்கேயே தங்கும் படி தன் படையினருக்கு உத்தரவிட்டார். இங்குள்ள ஆத்மநாதர் கோயிலுக்குள் சென்றார். இந்தக் கோயிலில் ஒரு விசேஷம் என்னவென்றால், இங்கு மூலஸ்தானத்தில் லிங்கம் கிடையாது. ஆண்டவன் உருவமின்றி இருக்கிறான் என்பது இங்கு தத்துவம். ஆவுடையார் மட்டும் இருக்கும். மேலே லிங்கம் இருக்காது. லிங்கம் இருக்க வேண்டிய இடத்தில், அடையாளம் தெரிவதற்காக ஒரு குவளையை வைத்திருப்பார்கள். அங்குள்ள புஷ்கரணியில் நீராடி, உடலெங்கும் வெண்ணீறு பூசி, சிவப்பழம் போல் காட்சியளித்த வாதவூரார், கோயிலுக்குள் சென்று உருவமற்ற இறைவனை, மனதுக்குள் உருவமாக்கி உருகி உருகி வணங்கினார். பின்னர் பிரகாரத்தை வலம் வந்தார். பிரகாரத்திலுள்ள குருந்தமரத்தடியில் தெட்சிணாமூர்த்தியாய் அமர்ந்திருந்த சடை தாங்கிய சிவத்தொண்டரைக் கண்டார். அவர் முன் விழுந்து வணங்கி பாமாலை பாடினார். அவர் தான் சிவம் என்று வாதவூராருக்கு உறுதியாகத் தெரிந்தது. அதற்கேற்றாற் போல், தன் திருவடியைத் தூக்கிய சிவன், தன் முன்னால் பணிந்து விழுந்து கிடந்த வாதவூராரின் சிரசில் வைத்துத தீட்சை வழங்கினார். அவரது திருவடி பட்டதோ இல்லையோ, வாதவூரார் மெய் சிலிர்த்து பாடல்கள் பாடத் தொடங்கினார். அவரது பாடல்களைக் கேட்டு இறைவன் உருகிப் போனார். அப்பா! நீ செந்தமிழால் என்னைத் தாலாட்டினாய். ஒவ்வொரு வார்த்தையையும் முத்தென்பேன்... இல்லையில்லை... மாணிக்கமென்று தான் சொல்ல வேண்டும். நீ மாணிக்கவாசகனப்பா... மாணிக்கவாசகன், என்றார் பெருமான். 🙏🏼


🙏🏼🔥#அன்றுமுதல் வாதவூரார் மாணிக்கவாசகர் ஆகி விட்டார். மாணிக்கவாசகருக்கு மீண்டும் ஆசியளித்து விட்டு, சிவன் மறைந்துவிட்டார். சிவன் தனக்கு காட்சி தந்த அந்த ஊரிலேயே தங்கி சிவகைங்கர்யம்செய்ய மாணிக்கவாசகர் முடிவு செய்தார். படையினரை அழைத்தார். குதிரை வாங்குவதற்கான ஏற்பாடுகளை நான் செய்து விட்டேன். குதிரைகளுடன் நான் ஆடிமாதம் மதுரைக்கு வருவதாக மன்னரிடம் சொல்லுங்கள். நீங்கள் எல்லாரும் இப்போது ஊருக்கு கிளம்பலாம், என்றார். படையினரும், அமைச்சரின் கட்டளையை ஏற்று ஊருக்குப் புறப்பட்டனர். பின், தான் கொண்டு வந்த பணத்தைக் கொண்டு கோயிலைத் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்தினார். கையில் இருந்த செல்வமும் வேகமாகக் கரைந்தது. இதனிடையே ஆடி பிறந்துவிட்டது. குதிரை வாங்க வந்த ஞாபகமே மாணிக்கவாசகருக்கு மறந்து போனது. அவர் எப்போதும் சிவாயநம..சிவாயநம என உச்சரித்தபடியே இருந்தார். பாண்டியமன்னன், தன் அமைச்சரின் வரவை எதிர்நோக்கிக் காத்திருந்தான். திருப்பெருந்துறையில் அவர் தங்கியிருக்கிறார் என்பதை ஏற்கனவே வந்த படைவீரர்கள் மூலம் தெரிந்திருந்த அவன், அவருக்கு ஒரு வீரன் மூலமாக ஓலை அனுப்பினான்...🐎🤔


🐎🔥#ஓலையைப் படித்த பிறகு தான், அவருக்கு பழைய நினைவே திரும்பியது. நேராக ஆத்மநாதர் சன்னதிக்கு ஓடினார். ஐயனே! மன்னன் என்னை நம்பி, குதிரை வாங்க அனுப்பினான். நானோ, உன் திருப்பணிக்கென செல்வம் அனைத்தையும் செலவிட்டேன். இப்போது, குதிரைகளை அங்கு கொண்டு சென்றாக வேண்டுமே! நீ தான் வழிகாட்ட வேண்டும் என்று இறைஞ்சினார். அப்போது அசரீரி ஒலித்தது. கவலைப்படாதே மாணிக்கவாசகா! விரைவில் குதிரைகளுடன் வருவதாக பதில் ஓலை அனுப்பு. மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன், என்றது அக்குரல். இறைவனின் குரல் கேட்ட மாணிக்கவாசகர், அவர் சொன்னபடியே மதுரைக்கு குதிரைகளுடன் வருவதாகப் பதில் ஓலை அனுப்பினார். அரிமர்த்தன பாண்டியனும் ஓலையைப் படித்து மகிழ்ந்தான். மன்னன் குறிப்பிட்டிருந்த காலம் நெருங்கியது. 


🐎🔥#குதிரைகள் எப்படி வரும் என்ற கவலையில் இருந்த மாணிக்கவாசகரின் கனவில், மாணிக்கவாசகா! நீ உடனே கிளம்பு. நான் குதிரைகளுடன் வருகிறேன், என்றார். இறைவனை வேண்டி மாணிக்கவாசகர் பாண்டியநாட்டுக்கு கிளம்பினார். அரண்மனைக்குச் சென்ற மாணிக்கவாசகரிடம், அமைச்சரே! குதிரைகள் எங்கே? எத்தனை குதிரை வாங்கினீர்கள்? என்று கேட்ட மன்னனிடம்,அரசே! தாங்கள் இதுவரை பார்த்திராத குதிரை வகைகள் வரிசையாக வந்து சேரும், என்று பதிலளித்தார் மாணிக்கவாசகர். நீண்டநாட்களாகியும் குதிரைகள் வராததால் மன்னனுக்கு சந்தேகம் ஏற்பட்டு, நம்மை ஏமாற்றிய இவனைச் சிறையில் அடைத்து சித்ரவதை செய்யுங்கள், என ஆணையிட்டான். காவலர்கள் அவர் முதுகில் பெரிய பாறாங்கற்களை ஏற்றி கொடுமைபடுத்தினர். அரசுப் பணத்தைக் கொள்ளையடித்ததாக ஒப்புக்கொள்ளாவிட்டால் மறுநாள் தண்டனை அதிகரிக்கும் என்று எச்சரித்து சென்றனர். இதற்குள் மன்னன் விதித்த கெடு காலமான ஆடி முடிந்து ஆவணி பிறந்துவிட்டது. 


🦬🔥#அம்மாதத்தில் வரும் மூலம் நட்சத்திர நாளன்று சிவபெருமான் நந்தீஸ்வரரை அழைத்தார். நந்தி! என் பக்தன் மாணிக்கவாசகன், குதிரை வாங்கித்தராத குற்றத்திற்காக பாண்டியநாட்டு சிறையில் அவதிப்படுகிறான். நீயும், நம் பூதகணத்தவர்களும் காட்டிலுள்ள நரிகளை குதிரைகளாக்கி அங்கு கொண்டு செல்லுங்கள். நான் குதிரை வீரனாக உங்களுடன் வருவேன், என்றார். நந்தீஸ்வரரும் மகிழ்ச்சியுடன் அவ்வாறே செய்தார். ஆயிரக்கணக்கான குதிரைகள் மதுரை நகருக்குள் அணிவகுத்து வந்தது பற்றி மன்னனுக்கு தகவல் சென்றது. அந்த அழகான, விலைமதிக்க முடியாத குதிரைகளைக் கண்டு மன்னன் ஆச்சரியப்பட்டான். அன்று இரவே அந்த குதிரைகள் அனைத்தும் நரிகளாகி ஊளையிட்டன. தன்னை ஏமாற்றி விட்ட மாணிக்கவாசகரை சுடுமணலில் நிற்க வைத்தனர். தூரத்தில் தெரிந்த மீனாட்சியம்மன் கோபுரத்தைப் பார்த்து, இறைவா! இதென்ன சோதனை! குதிரைகளை நரிகளாக்கிய மர்மம் என்ன? இத்தகைய கொடுமைக்கு ஏன் என்னை ஆளாக்கினாய்? என்று கண்ணீர் விட்டார். சுடுமணல் நிறைந்து கிடந்த அந்த ஆற்றில் மழையே பெய்யாமல் திடீரென வெள்ளம் பெருகி வந்தது. காவலர்கள் அடித்து பிடித்துக் கொண்டு கரைக்கு ஓடினர். ஆனால், மாணிக்கவாசகரைக் கட்டியிருந்த கற்கள் உடைந்தன. அவர் எழுந்தார். அவர் நின்ற பகுதியில் மட்டும் வெள்ளம் அவரது பாதங்களை நனைத்துக்கொண்டு மூழ்கடிக்காமல் ஓடியது. சற்றுநேரத்தில் வெள்ளத்தின் அளவு மேலும் அதிகரித்து கரை உடைத்தது. மாணிக்கவாசகர் இருந்த இடத்தை விட்டு அசையவில்லை. எம்பெருமானைப் புகழ்ந்து பாடியபடி குளிர்ந்த நீரில் நடப்பது நடக்கட்டுமென நின்றார். வைகை நதியின் வெள்ளப் பெருக்கு மதுரை நகரை அலைக்கழித்தது. வீட்டுக்கு ஒருவர் கரையை அடைக்கும் பணிக்கு வரவேண்டுமென முரசறைந்து அறிவிக்கப்பட்டது. மதுரையில் வந்தி என்னும் மூதாட்டி பிட்டு விற்று பிழைப்பவள். அவள் தினமும் முதல் பிட்டை சுந்தரேஸ்வரருக்கு நைவேத்யம் செய்வாள்.💃 


🔥🙏🏼#அதை சிவனடியார் ஒருவருக்கு பிரசாதமாகக் கொடுத்து விடுவாள். வந்திக்கிழவிக்கும் கரையை அடைக்கும் பணியின் ஒரு பகுதி தரப்பட்டது. கூலிக்கு ஆள் தேடினாள். சுந்தரேஸ்வரப் பெருமான் தனக்கு தினமும் பிட்டிட்டதுடன் தர்மமும் செய்து வணங்கிய அந்த பெருமூதாட்டிக்கு உதவி செய்ய முடிவெடுத்து கூலி ஆள் போல பாட்டி முன் வந்து நின்றார். பாட்டி! உனக்கு பதிலாக நான் கரையை அடைக்கிறேன், பதிலுக்கு நீ எனக்கு பிட்டு மட்டும் கொடுத்தால் போதும் என்றார். பாட்டியும் ஒத்துக் கொண்டாள். பின் ஒழுங்காக பணி செய்யாமல், மண்ணை வெட்டுவது போலவும், பாரம் தாங்காமல் அதே இடத்தில் கூடையை கீழே தவற விட்டது போலவும் நடித்தார். அப்போது அரிமர்த்தனபாண்டியனே பணிகளைப் பார்வையிட அங்கு வந்ததைக் கண்ட சுந்தரேஸ்வரர், ஒரு மரத்தடிக்குச் சென்று, உறங்குவது போல பாசாங்கு செய்தார். யாரோ ஒருவன் வேலை செய்யாமல், தூங்குவதைக் கவனித்து விட்ட மன்னன், அங்கு வந்து அவரை பிரம்பால் அடித்தான். அந்த அடி உலக உயிர்கள் அனைத்தின் மீதும் விழுந்தது. 


🕉️🔥#உடனே_அந்த கூலியாள் ஒரு கூடை மண்ணைக் கரையில் கொட்டியதும் வெள்ளம் வற்றிவிட்டது. இதைக் கண்ட மன்னன் அதிசயித்தான். இந்த அதிசயம் நிகழக்காரணமாய் இருந்த மூதாட்டி வந்தியைக் காணச் சென்ற போது, வானில் இருந்து புஷ்பக விமானத்தில் வந்த சிவகணங்கள் தங்களை அழைத்து வரும்படி சிவபெருமானே உத்தரவிட்டார், தாங்கள் எங்களுடன் வாருங்கள், என்று அழைத்துச்சென்றனர். அவளும் மகிழ்வுடன் சிவலோகத்துக்குப் பயணமானாள். உடனே பாண்டியன், எனக்கெதற்கு இந்த அரசாங்கம்? இதனால், என்ன பலன் கண்டேன். என புலம்பினான். அப்போது அசரிரீ ஒலித்தது. அரிமர்த்தனா! திருவாதவூராரின் பொருட்டு இந்த லீலைகளைப் புரிந்தது நானே! என்றார். தனது தவறை உணர்ந்து அவரிடம் மன்னிப்பு கேட்ட மன்னன், மீண்டும் அமைச்சர் பொறுப்பேற்க வேண்டினான். மாணிக்கவாசகரோ அதை ஏற்காமல் அவனை ஆசிர்வதித்து விட்டு, தில்லையம்பலமாகிய சிதம்பரத்துக்குச் சென்று விட்டார். அங்கு வேதியர் போல அமர்ந்திருந்த சிவபெருமான், மாணிக்கவாசகர் பாடப்பாட ஓலைச்சுவடியில் எழுதத் தொடங்கினார். எழுதி முடித்த சிவபெருமான் அந்த ஓலைச்சுவடியின் மேல் மணிவாசகன் சொன்ன திருவாசகத்தை எழுதியது அழகிய திருச்சிற்றம்பலமுடையான் என்று கையொப்பமிட்டு சிதம்பரம் கனகசபையில் வைத்து விட்டு மறைந்து விட்டார். அப்போது தான் மாணிக்கவாசகருக்கு தான் கூறிய திருவாசகத்தை எழுதியது சிவபெருமான் என்பது தெரியவந்தது. பன்னிரு திருமுறைகளில் 8ம் திருமுறை மாணிக்கவாசகரால் பாடப்பட்ட திருவாசகமும், திருக்கோவையாரும் ஆகும். ஞானநெறியைப் பின்பற்றிய இவர் 32 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தில் சிவனடி சேர்ந்தார்...🙏🏼

Comments

Popular posts from this blog

குமார பர்வதம் இனிமையான ஒரு பயண அனுபவம்

குமாரபர்வதம் என்பது மேற்குதொடர்ச்சி மலையில் குடகுமலையில் இரண்டாவது உயர்ந்த சிகரம். கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து மேலும் ஒரு 100 கிலோ மீட்டர் பயணம் செய்து இந்த குமார பர்வத மலையின் அடிவாரம் குக்கே சுப்பிரமணியா என்ற இடத்தை அடைந்தால் அங்கே தமிழ்நாட்டில் இருக்கும் பழனி கோவில் போன்று முருகனுக்கு ஒரு கோவில் இருக்கிறது. அதன் அடிவாரத்தில் இருந்து சுமார் 14 கிலோமீட்டர் பயணம் செய்து குமாரபர்வதா மலையை அடைய வேண்டும். வினோத், நான் மற்றும் பாலா .. .. நான் டிசம்பர்-6 2019 அன்று மதியம் சென்னை சென்ரல் ரயில் நிலையத்தில் இருந்தது மங்களூர் செல்லும் West coast express train-ல் இருந்து எனது பயணத்தை தொடர்ந்தேன்... மேலும் வினோத் தஞ்சாவூரில் இருந்து கோவைக்கு இரவு 8:00 மணிக்கு வந்து நான் பயணித்த West coast express train-ஜ சரியான நேரத்தில் பிடித்தான்... வினோத் அவனுக்கும் எனக்கும் சேர்த்து இரவு உணவாக இட்டிலி கொண்டு வந்திருந்தான்... இரவு ரயில் பயணத்தின்போது நாங்கள் எங்களுடைய பயணத்தையும் மற்றும் பயண கட்டமைப்பு பற்றியும் விவாதித்து வந்தோம்... அதே நேரத்தில் பெங்களூர்  இருந...

திருவண்ணாமலை - புண்ணியம் தேடி ஒரு பயணம்

எனது வாழ்க்கையில் கடினமான மற்றும் இக்கட்டான சூழ்நிலையில் எனது உடல், மனம் மற்றும் ஆவியை ஒருமுகப்படுத்தி நவ்வாழ்கை வழங்கியவர் என்று எனது இதயத்தில் வாழும் எனது தாய் மற்றும் தந்தை போல் என்னுடன் இருக்கும் இந்த திருவண்ணாமலை உண்ணாமுலையாள் (பார்வதி) மற்றும் அண்ணாமலையார் (சிவன்) நான் பலமுறை திருவண்ணாமலை சென்று இருக்கிறேன். எனது திருமணத்திருக்கு முன்பும், திருமணமாகி எனது மனைவி ஆறு மாத காலம் தாய்மையாக இருந்த போது நாங்கள் திருவண்ணாமலை சென்று தரிசித்து விட்டு நாங்கள் குழந்தை பிறந்த பிறகு கண்டிப்பாக வந்து தரிசிக்கிறோம் என்று வேண்டிக்கொண்டோம். அதுபோல எங்கள் மகன் சர்வேஸ்வரன் பிறந்த பிறகு நாங்கள் திருவண்ணாமலை கோவில் சென்று நாங்கள் ஆசிர்வாதம் பெற்று வந்தோம். "நம்பினால் கைவிடமாட்டார் இந்த திருவண்ணாமலையார்". திருவண்ண்னாமலைக்கு பழங்காலம் முதலே ஒரு தொன்ம முக்கியத்துவம் உள்ளது. சங்க காலம் தொட்டு குறிப்பிடப்பட்டுவரும் சில கோயில்களில் அது ஒன்று. நிலவியலில் அடுத்த தடயம் உள்ளது. திருவண்னாமலை  ஒரு எரிமலை. திருவண்ணாமலையில் உள்ள அந்த எரிமலை பல லட்சம் வருடம் பழையது.  அந்த எரிமலை வெடித்து சிதறிய போது தீக்கு...

வெள்ளியங்கிரி மலை பயணம்...

வெள்ளியங்கிரி மலை பயண அனுபவம்தான் எங்கள் வாழ்க்கையில் அடுத்தடுத்த பயணங்கள் செய்ய வழிவகுத்தது... நம் வாழ்க்கையில் ஒரு முறையாவது இந்த வெள்ளியங்கிரி மலை பயணம் செய்ய வேண்டும்... இந்த பூமிப் பிரபஞ்சத்தில் மிகச் சிறந்ததும், புண்ணிய பூமியுமான நம் பாரத தேசம், மிகப் பழமையானதும், சக்திவாய்ந்ததும் ஆகும். எண்ணற்ற மகான்கள் மற்றும் சித்தர்கள் மலைவாழிடங்களில் தங்களின் சக்தியாலும், தவத்தாலும் கணக்கற்ற மலைகளில் கோவில்களும், ஆன்மீக மடங்களும், பீடங்களும் நிறுவி இருக்கின்றார்கள். அங்கு நாம் செல்வதின் மூலம், நாம் நமது மனம், உடல் மற்றும் ஆன்மாவை வலுப்படுத்திக் கொள்ள முடியும். சில இடங்களில் இறைவனே சுயம்புவாக வந்து குடியேறியும் உள்ளார். அப்படி எல்லாம் வல்ல ஈசனாகிய சிவபெருமான் வந்து குடியேறிய இடம் தான் நாம் பார்க்கும் தென் கைலாயம் எனப்படும் வெள்ளியங்கிரி மலை திருத்தலம். கோவை அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள வெள்ளியங்கிரி மலை ஒரு வழிபாட்டுத்தலம். ஏழு மலை கடந்து உச்சிக்கு சென்றால் நாம் தரிசிப்பது ஒரு சுயம்பு சிவலிங்கம். ஈஷா யோகா மையம் மற்றும் தியானலிங்கம் இருப்பதும் வெள்ளியங்கிரி...